Thirukkural விக்கி

முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள திருக்குறள்-சிறப்புரை என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும். குறளின் வரிகளுக்கேற்ற வகையில் பொருண்மைக்கேற்றவாறு பிற தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோளுடன் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரையுடன் 1330 குறளையும் ஆராய்ந்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள், குறள் முதற் குறிப்பு அகர நிரல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

“திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின் மெய்ப்பொருளைக் கண்டதாகாது மெய்ப்பொருள் காண்பதென்பது என்போன்றோர்க்கு எட்டாக் கனியே! எனினும் ‘ஆசைபற்றி அறையலுற்றேன்’, என்பதன்றி வேறில்லை.குறள் பொருள் கூறுந்தோறும் மேலொரு இலக்கியப்பொருள் நுகரும் சிறப்பினால் இது சிறப்புரையாயிற்று எனக் கொள்க.” என்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு குறளுக்கும் தரப்பட்டுள்ள உரை வாசகர்களுக்கு தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, இரட்டைக்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், கம்ப ராமாயணம், வில்லி பாரதம் முதலான 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து ஒத்த கருத்துடைய பாடல்களை உரிய விளக்கத்துடன் எடுத்தாண்டுள்ளார்.

திருக்குறள் குறள் எண், பாடல் வரிகள், உரை, இலக்கியத்திலிருந்து காட்டப்படும் மேற்கோள் பாடல் வரிகள், உரிய எண், உரை என்ற வகையில் தந்துள்ளார். நூலைப் படித்து நிறைவு செய்யும்போது திருக்குறள் மட்டுமன்றி பிற நூல்களையும் படித்த உணர்வு ஏற்பட்டது. ஏறத்தாழ 850 பக்கங்கள் கொண்ட இந்நூலிலிருந்து சில பாடல்களைக் காண்போம்.

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வானின்று அமையாது ஒழுக்கு. (திருக்குறள், 20)

எவ்வகைப்பட்ட மக்களுக்கும் நீரின்றி உலக வாழ்க்கை நடைபெறாது; அந்நீரும் வானின்று வீழும் மழையேயன்றி வேறில்லை.

கழிந்தது பொழிந்து எனவான் கண்மாறினும்

தொல்லது விளைந்து எனநிலம் வளம் கரப்பினும்

எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை.” (புறநானூறு, 203)

முன்பு மழை பொழிந்தோம் என்று கருதி இப்போது மழை பெய்யாது போகுமானால், முற்காலத்து விளைந்தோம் என்று கருதி இப்போது நிலம் விளையாது போகுமானால், இவ்வுலகில் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை இல்லாது ஒழியுமே.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு. (திருக்குறள், 212)

நேரிய முறையில் முயன்று ஈட்டிய பொருள் எல்லாம் இல்லார்க்கும் இயலாதவர்க்கும் வேண்டுங் காலத்து உதவி செய்தற் பொருட்டேயாம்.

வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை

வேள்வியோடு ஒப்ப உள.” (நான்மணிக்கடிகை, 51)

வேதக் கருத்துகளை உடைய பழைய தனிப்பாடல்களும் உள்ளன, வேள்விக்கு நிகரான உதவிகளும் உள்ளன.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல். (திருக்குறள், 577)

கண் உடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதவர்களாக இருப்பதில்லை; கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண் உடையவர்கள் அல்லர்.

எழுத்து எண்ணே நோக்கி இருவரையும் கண்டு ஆங்கு

அருட்கண்ணே நிற்பது அறிவு.” (அறநெறிச்சாரம், 172)

இலக்கியம், கணிதம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நூல்களை ஆராய்வதால் பயன் ஒன்றும் இல்லை; இம்மை மறுமைப் பயன்களை அளிக்கும் நூல்களையே ஆராய்ந்து கற்று, அவ்வழி கருணையோடு ஒழுகுதலே அறிவுமிக்க செயலாம்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து. (திருக்குறள், 856)

பிறரை இகழ்வதே இன்பம் என்று கருதி, அதனை மிகவும் விருப்பமுடன் செய்வானது வாழ்க்கை, அமைதியின்றித் துன்புறுதலும் அழிவதும் விரைந்து நிகழும்.

கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு

நாத்தினும் நல்ல சுனைத்து.” (நாலடியார், 335)

பிறரைக் குறை கூறாவிட்டால் பேதையின் நாக்கில் தினவு ஏற்பட்டு, அரிப்பு எடுக்கும்.

மாறுபட்ட கோணத்தில் உரையினைத் தந்து திருக்குறளுக்கு மிகவும் நெருக்கமாக நம்மை அழைத்துச்சென்றுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : திருக்குறள்-சிறப்புரை

ஆசிரியர் : முனைவர் இரெ.குமரன் (9443340426)

பதிப்பகம்: மின்கவி, கோபி, ஈரோடு மாவட்டம் 638 452 (9626227537)

பதிப்பாண்டு: செட்டம்பர் 2021

விலை உரூ.800

  • முனைவர் பா.சம்புலிங்கம்